நல்ல மேய்ப்பரும் மேயத்தெரியாத மந்தைகளும்!

ஆடம்பர  அரசியல்  செய்தால் மட்டுமே அரசியல்வாதியாகப்  பிழைப்பு நடத்த முடியும் என்று வாழ்பவர்கள் மத்தியில், சம காலத்தில், 'நிறைகுடம் தழும்பாது' என்பதற்கு வாழும் சான்றாக இருப்பவர் சம்பந்தர் ஐயா.

அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்பவர்கள் எவருமே அதில் இறங்கிச் சுத்தம் செய்ய முன்வந்ததில்லை. இறங்கி இருப்பவர்கள் எல்லோரும் சுத்தம் செய்ய வந்தவர்கள் இல்லை. முடிந்தவரை சுத்தம் செய்வேன் என்று 1977 இல் இருந்து பாடுபட்டு வரும் ஒரு நல்ல தலைவர், மேய்ப்பர்; தமிழர்களின் சம்பந்தன் ஐயா.  

அடாவடித்தனத்தையும் அதிகப்பிரசங்கித்தனத்தையும் அரசியல் என்று கருதுகின்ற பல மூத்த அரசியல்வாதிகள் எமக்குக் கிடைத்த வரமல்ல; சாபம். இவ்வாறான அடாவடித்தனமானதும் அதிகப்பிரசங்கித்தனமானதுமான "அரசியல்" எமக்கு எந்த விதமான நன்மையையும் பயக்காது; மாறாக எமது இன ஒற்றுமையையும், எமக்குள்ள அங்கீகாரத்தையும் சீர்குலைக்கும் என்பதனைப் புரிந்துகொள்ளாத இளைஞர்களின் சூடான உதிரத்தில் குளிர்காயும் அரசியல்வாதிகளை இனம்கண்டு களையெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. 

ஆனால் இருந்தும் இல்லாமலிருக்கும் இறைவனைப் போலத்தான் எம்முடைய இனப்பற்றும். சந்தர்ப்பவாத சகட்டுமேனி அரசியல் எம்மூர் சந்துபொந்துகளில் எல்லாம் புரையோடிக்கிடக்கிறது. எம்மில் பெரும்பாலானோருக்கு அரசியல் என்பது தமிழ் அரசுக் கட்சியின் பிரச்சினை. கூட்டமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சியல்ல என்பது எம்மில் பல பேர் உணராத உண்மை. இந்த நிலமைக்கு நாம் சந்தித்த உண்ணாட்டு யுத்த சூழ்நிலை முக்கியமான காரணம் என்றாலும் அதே யுத்த சூழ்நிலையைக் காரணம் காட்டி சில குழுக்கள் மக்களை மந்தைகளாக வைக்க முனைந்ததனையும் மறுக்க முடியாது.

இளைஞர்களினைப் பொறுத்தவரை அரசியல், இனப்பற்று என்பது அவர்களுடைய வெளிநாட்டுக் கனவு நனவாகும் வரையான ஒரு பொழுதுபோக்கு அம்சம். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் "அரசியல்" கவலைக்கிடமானது மட்டுமல்லாமல் நகைப்புக்கிடமானதும் கூட. தங்களுடைய 3 அல்லது 4 அல்லது 5 வருட கற்கைநெறி முடிவடையும் வரை சிட்டி ஏற்றுதலும், 'தனிநாடு' புராணம் படிப்பதும் இனப்பற்று என்று பறைசாற்றிவிட்டு பட்டமேற்றதும் சிட்டாகப் பறக்கின்ற அரைக்காற்சட்டைத் தனத்தைக் காண்கின்ற போது நாம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணமாக எம்முடைய குறுகிய மனப்பான்மையைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று எண்ண விளைகின்றது மனது.

அடாவடித்தனமான தீர்மானங்கள் நிறைவேற்றுவதும், சில்லறைத்தனமான அறிக்கைகள் விடுவதும் என்று 'உணர்ச்சி' அரசியல் நடத்துகின்ற தன்மை எம்மிடையே மேலோங்கி இருப்பது தெள்ளத்தெளிவு. அத்தகைய ஆடம்பர அரசியல் எம்முடைய அபிலாசைகளை எய்துவதற்கு எந்த விதத்திலும் அனுசரணையாக அமையாது என்பதனை உணர மறுக்கின்ற அசமந்தப்போக்கு உடனடியாகக் குணப்படுத்தப்படவேண்டியது.

இவ்வாறான பசப்பு அரசியலினை அறவே ஒதுக்கி எமது இனத்துக்கு ஒரு கௌரவமான தீர்வு ஒன்றினை சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் தனது வாழ்க்கையின் அந்திமப்பொழுதிலும் அயராது முயன்று வருகின்ற சம்பந்தன் ஐயாவினைப் பற்றியும் அவரின் அரசியல் அணுகுமுறைகளைப் பற்றியும் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக குறைசொல்லித் திரியும் எம்மினத் தியாகிகளைக் காணும் போது சினம் சிரசு வரை ஏறுகிறது.

தங்களுடைய உரிமைகளையும் உணர்வுகளையும் உயில் எழுதிக்கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்ட எம்முடைய அசமந்தப்போக்கே இந்த நிலைமைக்கு மூலகாரணம். இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு குறித்த சந்தர்ப்பத்தில் ஒரு குறித்த குழுவினரால் வழங்கப்பட்ட துப்பாக்கிமுனை 'அங்கீகாரத்தினை' பரிசீலனை செய்ய விரும்பாத நாங்களும் அதே அதிகாரத்தினை எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்க தயாரில்லாத எம்முடைய அரசியல் பிரதிநிதிகளும் எம் இனத்தின் புற்றுநோய்.

ஆயுதப்போராட்டம், எமக்கான தீர்விற்கு ஒரு கருவியாக மட்டுமே செயற்பட முடியுமே தவிர அதுவே ஒரு தீர்வாக அமையாது என்பதனை நாம் உணர மறுத்ததின் விளைவு தான் '2009 வைகாசி'. வெள்ளமுள்ளிவாய்க்காலில் உயிர் வற்றி நின்றவர்கள் எவரும் இதனை மறுக்க மாட்டார்கள். கடல் கடந்து இருந்துகொண்டு நாடு கடந்த அரசாங்கம் பற்றிப் பேசுபவர்கள் இதனை மறுத்துப்பேசுவதனை நான் பொருட்படுத்தப்போவதும் இல்லை. இங்கு உள்ளவர்களின் இரத்தத்தில் இன உணர்வுச் சாயம் பூசி மறத்தமிழனாக தங்களினை அடையாளப்படுத்த கடும் பிரயத்தனப்படும் எம்மவர்களின் முதலைக் கண்ணீரல்ல எமது தேவை. மாறாக, எமது அரசியல் தேவைகளை அறிந்த இந்த மூத்த தலைவனின் பின்னல் அணி திரள்வது.

ஆதங்கத்துடன்,
ஐங்கரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பி எனக்கொரு எழுதுமட்டுவாழ்!

வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை