காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை

ஜனவரி 8 இற்கு முன்னர் அடாவடித்தனமான அரசியலுக்கு பயந்து வாயோடு சேர்த்து அத்தனை ஓட்டைகளையும் மூடிக்கொண்டிருந்த அத்தனை இன உணர்வாளர்களும் இன்று பாய்ந்தடித்துக்கொண்டு கருத்துச் சொல்வதைப் பார்க்கும் போது மைத்திரிக்கு வாக்களித்தது வீண்போகவில்லை என்பது தெளிவாகின்றது. கடந்த 9 வருடங்களாக நடந்த காட்டுமிராண்டித்தனமான ஆளுகைக்கும் அதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கி முனையில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முறைமைக்கும் பழக்கப்பட்டுப் போன எமக்கு, நாம் தற்போது சுவாசிக்கின்ற ஜனநாயகக் காற்றின் அடர்த்தி சற்று அசௌகரியமாக இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

பத்திரிகைகளிலும் பத்திரிகை விழுமியங்களை அலட்சியப்படுத்தும் இணைய ஊடகங்களிலும் (ஒட்டுமொத்தமாக குற்றம் சாடுவதல்ல நோக்கம்) வெளிவரும் செய்திகள்  மாத்திரம் தான் இலங்கை அரசியல் என்கின்ற ரீதியில் தங்கள் அரசியல் ஆய்வுகளை முன்வைக்கும் கற்றுக்குட்டிகளை பார்க்கும் போது எமது வளர்ச்சியின் போக்கு புரிகிறது.

30 வருட யுத்தத்தினால் இலங்கையராகிய நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதனை மறுப்பதற்கில்லை. பாதிக்கப்பட்ட நபரின் திறனையும் பின்புலத்தினையும் கருத்திலெடுக்காது பாதிப்பினை மட்டும் தராசில் ஏற்றி எடை பார்ப்பது என்பது மனிதாபிமானக் கோட்பாட்டின் அத்தனை அடிப்படைகளையும் அலட்சியப்படுத்துவதாக அமையும்.

அடுத்து, மாற்றம் என்பது எவ்வளவு அவசியமானதும் தவிர்க்கப்பட முடியாததும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். அதே வேளை ஒவ்வொரு மாற்றமும் ஏற்படுத்தப்போகின்ற சாதகமான பாதகமான விளைவுகளை சீர் தூக்கிப் பார்க்கவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அபிலாசைகளின் மீது தம்முடைய சுயலாபக் கோட்டைகளினை கட்ட முயல்பவர்கள் யார் என்பதனை இனங்கான வேண்டியது எம்முடைய பொறுப்பு. எம்முடைய பிரதிநிதிகளாக அரச எந்திரத்தின் வெவ்வேறு கட்டமைப்புகளுக்கு நாம் தெரிவு செய்யும் எம்மவர்கள் கொண்டுள்ள அதிகாரங்கள் என்ன? அவ்வாறன அதிகாரங்களினை நடைமுறையில் எந்தளவுக்குப் பிரயோகிக்க முடியும்? எம்முடைய உண்ணாட்டு அரசியலின் மீதான பிராந்திய, சர்வதேச அரசியலின் அழுத்தங்கள் எந்தளவுக்கு உள்ளது போன்ற விடயங்களினை புரிந்து கொள்ளவேண்டிய-புரிய வைக்கவேண்டிய தேவைப்பாடு நாம் உணர்ந்துள்ள அளவினை விட மிக அதிகமாகவே உள்ளது.

சிறுபான்மையினராகிய நாங்கள் பலவிதமான பாரபட்சங்களினை முகங்கொடுத்து வருகின்றோம் என்பது மறுதலிக்க முடியாத விடயம். சம உரிமைக்காக எம்மைச் சார்ந்தவர்கள் முன்னெடுத்த ஆயுதபோராட்டம் (முன்னெடுக்கப்பட்ட விதம் சரியானதா இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விவாதத்திற்குரிய விடயம்) மிகக்கொடூரமான முறையில் முடக்கப்பட்டது வேதனையான விடயம். இன்று "போராட்டம்", "தலைவர்", "அவர்கள்" "பெடியள்" என்று உணர்ச்சி பொங்கப் பேசுபவர்களில் பலர் அதற்கான பங்களிப்பை செய்ததும் இல்லை, இனியும் செய்யத் துணியப் போவதில்லை. 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழராக எமக்கிருந்த பேரம்பேசும் சக்தி இன்று எம்மிடம் இல்லை என்பதனையும், ஜனவரி 8 இற்குப் பின்னரும் எமக்கு இழைக்கப்பட்ட அநீதி சரியென்று சாதிக்கின்ற பெரும்பான்மை இன மக்களுடனும், அரசியல்வாதிகளுடனும் தான்  நாம் தீர்வுக்கான கோரிக்கைகளினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதனையும், ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு அரசியல் நிறுவனம் என்பதனையும், பூகோள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும் அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாட்டினுடைய செயற்பாடுகளும் அமைந்திருக்கும் என்பதனையும் உணர்ந்து கொள்ளாமல் எம்மவர் மீதே நாம் சேறு பூச எத்தனிப்பது எந்த விதத்திலும் எமக்குப் பலனளிக்கப்போவதில்லை.

மாறாக, எமக்கான தலைவிதி தீர்மானிக்கப்படுகின்ற இடங்களில் ஒரு குரலாக எம்முடைய அபிலாசைகளினை முன்மொழியக்கூடிய ஒரு பலத்தினைக் கட்டியெழுப்ப வேண்டும். அந்தத் தேவைப்பாட்டினை உணர்ந்து கொண்டுள்ள எவரையும் எம்முடைய பிரதிநிதிகளாக தெரிவு செய்வதில் நாம் பின் நிற்கக்கூடாது. அது வீடு வடிவத்தில் வந்தாலும் சரி, துவிச்சக்கர வண்டி வடிவத்தில் வந்தாலும் சரி, இல்லை கழுதை வடிவத்தில் வந்தாலும் சரி. ஆனால் எம்முடைய குரல் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். அதற்காக எம்முடைய வாக்குகள் சிதறுண்டு போகாமல் காப்பதற்காக ஒரே அணியின் கீழ் அணிதிரள வேண்டும். எம்மை மண் குதிரையில் ஆறு கடக்க அழைப்பவர்கள் யார் என்பதனையும் இராமாயண அணிலாக சிறிதளவேனும் எம்முடைய முனைப்புகளுக்கு துணை நின்றவர்கள் யார், இப்போதும் நிற்பவர்கள் யார் என்பதனை பகுத்தறிகின்ற பக்குவம் வேண்டும் எமக்கு.

ஜனவரி 8 இற்குப் பின்னர் நாம் கண்ணுற்ற சாதகமான மாற்றங்கள் (அது போதுமானதாக இல்லாத போதும்) எதுவும் "காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை" அல்ல என்பதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். வெறும் ஆர்ப்பாட்ட வசனங்கள் எமக்கு சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமையினை வென்று தரும் என்று நம்புவதனையும், "எம்மவர்கள்" என்பதற்காக அவர்கள் புரிந்த தவறுகளினை ஏற்கத் தவறுவதும், தவற்றினை சுட்டிக்காட்டுபவர்களினை "துரோகிகள்" என அடையாளப்படுத்துவதும் எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல.

ஆக, எதிர்வரும் தேர்தல் எம்மவர்களினை நாமே ஏளனப்படுத்தும் செயற்பாடாக அமையாமல், எம்மவர்களுடைய உரிமைக்குரலினை ஒரே குரலாக ஒலிக்கச் செய்கின்ற ஒரு களமாக அமைய நாம் தனி நபர்களாக அல்லாமல் தமிழர்களாக சிந்திக்க வேண்டும்.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பி எனக்கொரு எழுதுமட்டுவாழ்!

வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்