மாற்றத்தினை மறுக்காத ஒரு பாமரத்தமிழன்

பொதுத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்ட பலவிதமான (அரசியல்) கருத்துக்கள் பல தரப்பட்ட மக்களிடையே / குழுக்களிடையே நிலவி வந்தாலும் தமிழ் மக்களினைப் பொருத்தவரையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தவரையில் இரு அரசியல் கட்சிகள் தொடர்பிலான அவ் இரு கட்சிகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாறல்களும், சாடல்களும், சேறு பூசல்களும்  வகைதொகையின்றி வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இணைய ஊடகங்களும் முகப்புத்தக பதிவுகளும் தங்களுடைய நாளாந்த வாழ்வில் சிக்கித் திண்டாடிக்கொண்டிருக்கும் மக்களை அல்லல் படுத்திக்கொண்டிருப்பது கண்கூடு. இவ்வாறன கருத்துப் பரிமாறல்கள் மனித விழுமியங்களையும் நாம் வாய் கிழியப் பேசும் தமிழர் பண்பாடுகளையும் மீறாத வகையில் அமையும் வரைக்கும் ஆரோக்கியமானதே. ஒரு வகையில் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதனை எம்மில் பலருக்கு நினைவுபடுத்துவதே தேர்தல்களும் இவ்வாறன கருத்து மோதல்களும் தான்.

நிற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிகளுக்கு இடையிலான கட்சி ஆதரவாளர்களுக்கு இடையிலான வாதப்-பிரதிவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லாமல் எதிரணியினர் மீது சேறு பூசுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக "மாற்றத்துக்கான தமிழர்கள்" என்று "மாற்றம் வேண்டும்" என்ற அடிப்படையில் குரல் எழுப்பி வருபவர்கள் தாங்கள் முன்மொழிகின்ற "மாற்றங்கள்" என்ன என்பது தொடர்பில் தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வருவது அசௌகரியத்தினை ஏற்படுத்துகின்றது. மேலும், குறித்த "மாற்றத்துக்கான தமிழர்கள்" குறித்த மாற்றத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களிடமும் மாத்திரம் எதிர்பார்கின்ற விதத்தில் கருத்தினை வெளியிடுகின்றனர்?

2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற வட மாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் UPFA கூட்டணிக்கு வாக்களித்த 35,995 மக்களினதும், UNP இற்கு வாக்களித்த 855 மக்களினதும், ஏனைய கட்சிகளுக்கும் சுயேச்சை குழுக்களுக்கும் வாக்களித்த மீதி 2,785 மக்களினதும் கிளிநொச்சி மாவட்டத்தில் UPFA கூட்டணிக்கு வாக்களித்த 7,897 மக்களினதும், ஏனைய கட்சிகளுக்கும் சுயேச்சை குழுக்களுக்கும் வாக்களித்த மீதி 483 மக்களினதும், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேர்தலினை புறக்கணிப்போம் என்ற வேண்டுகோளையும் மீறி யாழ் மாவட்டத்தில் வாக்களித்த குறிப்பாக மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்த 74,454 மக்களுடைய சிந்தனையை மாற்றும் எந்தவிதமான செயற்பாடுகளிலும் குறித்த "மாற்றத்துக்கான தமிழர்கள்" முன்னெடுக்காது, வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முன்வைத்து தங்களுடைய "மாற்றத்துக்கான" போராட்டத்தினை முன்னெடுப்பது சந்தேகமளிப்பதாக உள்ளது. ஏனெனில் இங்கு குறிப்பிடப்பட்ட கட்சிகள் எதுவுமே "இவர்கள்" எதிர்பார்க்கின்ற மாற்றங்களினை முன்மொழிகின்ற கட்சிகள் இல்லை.

இவ்வாறு "வீட்டிலிருந்து துவிச்சக்கரவண்டிக்கு" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மாத்திரம் எதிரியாகப் பார்க்கின்ற தன்மையானது எமக்கு இரண்டு விடயங்களினை சொல்கின்றது.
1. இவர்கள் எதிர்பார்க்கின்ற "மாற்றம்" மக்களினை மையப்படுத்தியதல்ல, குறித்த ஒரு கட்சியினை மையப்படுத்தியது - ஏனெனில் இவர்கள் சொல்கின்ற மாற்றம் வீட்டிற்கு வெளியிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் (வேறு கட்சிகளுக்கு அளிக்கப்பட வாக்குகளின் எண்ணிக்கை சான்று); அதற்கான செயற்பாடுகள் எதுவும் இம் "மாற்றம் விரும்பிகளால்" முன்னெடுக்கப்படவில்லை.
2. வீட்டினை இவர்கள் மட்டும் தான் எதிரியாகப் பார்க்கிறார்களே தவிர பெரும்பான்மை தமிழர்கள் அல்ல.

ஆக, எம்முடைய மக்கள் மாற்றங்களினை விரும்பாதவர்கள் இல்லை. ஆனால் அத்தகைய மாற்றங்கள் சுய லாபங்களுக்காக முன்னெடுக்கப்படாமல் மக்களுடைய தேவைகளினை நிறைவு செய்கின்ற எமது மக்களினை கௌரவமாக வாழவைக்கின்ற வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பி எனக்கொரு எழுதுமட்டுவாழ்!

வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை