தம்பி எனக்கொரு எழுதுமட்டுவாழ்!

இப் பதிவுடன் தொடர்புபட்ட சிறிய விபரத்துணுக்கு:
யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு 116 km
யாழ்ப்பாணம் - கொடிகாமம் 23 km

சமீபத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு ஆசன முற்பதிவு செய்யமுடியாத பேருந்தில் பயணம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. வேலை நிமித்தமாக யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவுக்கு காலை 5.20 மணிக்கு புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட, பார்த்த விஷயங்களின் உந்துதல் தான் இந்தப் பதிவு.

முல்லைத்தீவுக்கு காலை 5.20 மணிக்கு செல்வதற்கு அதிகம்பேர் முண்டியடிக்கமாட்டார்கள் என்ற தப்புக் கணக்குடன் காலை 5.10 யாழ்ப்பாண தனியார் பேருந்துத் தரிப்பிடத்துக்கு சென்ற எனக்கு அதிர்ச்சி. வழிநெடுக இருக்கின்ற ஊர்களின் பெயரைக் கூவிக்கொண்டிருந்த நடத்துனரை அணுகி, பேருந்து சரியானது என்பதனை உறுதி செய்துகொண்டு உள்ளுக்குள் நுழைந்த என்னை ஆசனங்கள்  எங்கும் தூக்கம் வராமலே படுத்திருந்த பைகள் வரவேற்றன. ஏற்கனவே வந்திருந்தவர்கள் தமக்காகவும் இன்னும் வராத தமக்குத் தெரிந்தவர்களுக்காகவும் ஆசனங்களை தம்முடைய பைகளை வைத்து ஒதுக்கியிருந்தார்கள். அவசரமாகக் கண்கள் துளாவியதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு ஆசனங்கள் வெறுமையாக இருந்தது என் கண்களில் பட்டது.

"சரி, பேருந்து புறப்பட்டதன் பின்னர் வெறுமையாக (எதுவும் எஞ்சியிருந்தால்) உள்ள ஆசனத்தில் அமருவோம்" என்று மனதுக்குள் எண்ணியபடி எஞ்சியிருந்த சில நிமிடங்கள்  செலவழிவதனைக் கணக்கிட்டுக்கொண்டிருந்த எனக்குப், பேருந்தின் உறுமல் ஆசனப்போட்டியினை நியாபகப்படுத்தியது.
அவசர அவசரமாக ஏற்கனவே தம்முடைய பைகளினை வைத்து "முன்பதிவு" செய்து வைத்திருந்த ஆசான்களில் அனைவரும் அமர்ந்ததும் பேருந்து நகரத்தொடங்கியது.

வெறுமையாக இருந்த இரண்டு ஆசனங்கள் என் கண்களை உறுத்த ஒன்றை அணுகி அமர எத்தனித்த போது, குறித்த ஆசனம் முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியினால் இன்னும் பேருந்தில் ஏறாத ஒருவருக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. குறித்த பேருந்தில் இவ்வாறான ஆசன ஒதுக்கீடு ஏற்புடையதன்று. இருந்த போதும் தர்க்கிக்க விரும்பாதனால் மறு ஆசனத்தை நோக்கி நகர எத்தனித்த என்னை, அந்தப் பெண்மணி குறித்த ஆசனத்தினை, யாழ்ப்பாண நகரத்திலிருந்து 33 km தூரத்தில் இருக்கின்ற கொடிகாமத்தில் ஏற இருக்கின்ற ஒருவருக்காக ஒதுக்கி வைத்திருக்கிறார் என்ற தகவல் என்னைத் தடுத்து நிறுத்தியது.  ஒவ்வொரு நிறுத்தமாக பொதுமக்களினை ஏற்றியும் இறக்கியும் கொடிகாமத்தினை அடைய எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். அந்த ஒரு மணி நேரத்துக்கு நான்/எவர் நின்று  பயணித்தாலும் பரவாயில்லை; குறித்த ஆசனம் தான் ஒதுக்கி வைத்த நபருக்குத் தான் என்பதில் அந்தப் பெண்மணி உறுதியாக இருந்தார்.

என்ன காரணமோ தெரியவில்லை, அவருடன் தர்க்கிக்க என்  மனது ஒப்பவில்லை. ஆனால் இந்த நொடி வரை அவரின் செய்கையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்பது மட்டும் நிஜம். நியாயமின்மையையும் சுயநலப்போக்கும் எம்மவர்களில் எந்த அளவுக்கு வேரூன்றி நின்கின்றது என்பதற்கு இந்த அற்ப நிகழ்வு கட்டியம் கூறுகிறது.

எவ்வளவு நீண்ட பயணமாக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு அருகில் வெறுமையாக இருக்கும் ஆசனத்தில் அமரமுடியாத "கலாச்சார" ஏற்பாடுகளும், "முதியவர்களுக்கும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் ஒதுக்குபட்டுள்ளது" என்று அறிவிக்கும் நாகரிகமும் நாம் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டுள்ளோம் என்பதனை பறைசாற்றாமல் அறிவிக்கின்றது.

அந்த 3 மணி நேரப் பிரயாணம் பழந்தமிழர் பண்பாடுகள் வழுக்கியாற்றினைப் போலவே வற்றிவிட்டது என்பதனை எனக்குப் புரியவைத்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை