கொன்றது நீ; குற்றவாளி நான்: (தற்)கொலைகள்

அடுத்தடுத்து பிரசுரமாகும் தற்கொலை செய்திகள், தற்கொலை என்பது தொற்றும் தன்மை உடையது என்று சமீபத்தில் எங்கோ வாசித்ததை நினைவுபடுத்திச் சென்றது. குறித்த தற்கொலைச் செய்திகள் என் மனதினை ரம்பமாக அறுப்பதினை என்னால் ஒவ்வொரு நொடியும் உணரமுடிகிறது.

ஒரு காலத்தில் தற்கொலை செய்பவர்கள் அனைவரும் முட்டாள்கள், முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று சொல்லித்திரிந்தவன் நான். ஆனால் இப்போதெல்லாம் அந்த அதிகப்பிரசங்கித்தனத்தினை எண்ணி வெட்கி நிற்கின்றேன்.

தற்கொலை என்பது எந்தக் காலகட்டத்திலும் எவராலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பதனை மறுதலிக்கவில்லை. அதேவேளை, தற்கொலை செய்தவர்களை, செய்ய எத்தனிப்பவர்களை விமர்சிப்பதற்கான அருகதை (சமூக அங்கத்தவர்கள் என்ற வகையில்) சிறிதளவேனும் இருக்கிறதா என்பதனை ஆராய வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதனையும் மறுதலிக்க முடியாது.

இங்கு எவரும் தன்னுடைய வாழ்க்கையை இப்படி இடைநடுவில் முடித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பூமிக்கு வருவதில்லை. நாகரிகம், வளர்ச்சி, மேம்பாடு என்ற செயற்கைத்தனமான சமூகக் கடப்பாடுகளின் தாக்கம் ஒவ்வொரு மனிதனதும் வாழ்க்கை உருவம் பெறுவதில் முதன்மையானதும் முக்கியமானதும் என்பது தவிர்க்க முடியாத தவறு.

தற்கொலைகளை வெறும் செய்திகளாகவே பார்க்கின்ற மனப்பாங்கு எம்மிடையே புரையோடிக்கிடக்கின்ற தன்மை, மனிதத்துவத்தின் ஒவ்வொரு விழுக்காட்டினையும் மீள்பரிசீலனை செய்யச் சொல்கிறது. இயற்கைக்கு முரணான விதத்தில் எம்மவர்களின் உயிர்களினைக் காவுகொள்ளும் சமூக அலட்சியங்கள் அடையாளம் காணப்பட்டு அவசரமாக சிரம் கொய்யப்பட வேண்டும்.

தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக நம்புவன் நான். அமெரிக்காவிலிருந்து அரியாலை வரை இது தான் உண்மை. இங்கு பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்குக் காரணம் ஈடுபாடு இல்லாமையே தவிர, தீர்வு இல்லாமை அல்ல. 

யாழ் பல்கலைக்கழகம் வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் தொழிற்சாலையாகத் தொழிற்படுகிறதே தவிர, சிந்தனையாளர்களை உருவாக்குகின்ற ஒரு பட்டறையாக செயற்படுவதில்லை என்பது சிந்திக்கத் தெரிந்த எவருக்கும் தெரிந்த உண்மை. எமது பிரதேசத்தினைச் சேர்ந்த சமூகவியலாலர்களும் கல்வியாளர்களும் எமது சமுதாயத்தின் (கவலைக்கிடமான) நிலை தொடர்பில் எந்த விதமான ஆய்வுகளையோ / கற்கைகளையோ மேற்கொண்டு அதற்கான தீர்வினைக் காண முனையாதது என்னை விசனமடைய வைக்கின்றது. 

தலைமுறை இடைவெளி என்பது இயற்கையின் கட்டாயம் என்பது நாம் யாவரும் அறிந்தது. இருப்பினும், குறைந்த பட்சமாக, அந்த இடைவெளியினைக் குறைப்பதற்காவது அந்தத் தலைமுறைகள் முனைகின்றனவா என்று பார்த்தால், அதுவும் இல்லை. "இந்தக்காலத்துப் பெடி பெட்டையள் அடங்காமல் திரியுதள்" என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லித்திரிகின்ற முந்திய தலைமுறை, ஓரிரு முறையாவது இளம் சந்ததியைப் புரிந்துகொள்ள முனைந்திருந்தால் தலைமுறை இடைவெளியையும் தற்கொலை எண்ணிக்கையையும் பாதியாகக் குறைத்திருக்க முடியும்.

"இளம் கன்று பயம் அறியாது" என்ற முதுமொழியினைப்  பொய்யாக்குகின்ற வகையில் இன்றைய தலைமுறையினை முதுகெலும்பு இல்லாதவர்களாக ஆக்குகின்ற எமது சமூக மற்றும் கல்விக் கட்டமைப்பு மாற்றப்படுகின்ற வரையில் தற்கொலைகள் தவிர்க்க முடியாதவை ஆகிவிடும். 

"தோளுக்கு மிஞ்சினால் தோழன்" என்பதை நடைமுறையில் கொண்டுவரும் வரை தலைமுறை இடைவெளி என்பது குணம் கொள்ள முடியாத புற்றுநோய். கூடவே சமூக அமைப்பும் பார்வையாளனாக இருக்காது பங்காளியாக இருக்க வேண்டிய கடப்பாட்டினை உணர வேண்டியது அவசர அவசியம்.

இனம் என்று சொல்லித் திரிகின்ற ஒவ்வொருவரும் இதற்காக இணைந்து செயற்படாவிட்டால், எம்முடைய முதல் எதிரி நாம் தான். இங்கு கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு உயிருக்கும் நான், நீ, அவன், அவள் எல்லோருமே பொறுப்பாளிகள் ஆகின்றோம். 

ஆம், தற்கொலை என்பது தனிமனிதனின் தவறல்ல; ஒரு சமூகத்தின் தவறு.


குற்றவாளிக் கூண்டில்,
ஐங்கரன் 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பி எனக்கொரு எழுதுமட்டுவாழ்!

வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை