கட்சி என்னும் காட்டாறு

ஒரே மாதிரியான கொள்கைகளையும், கோற்பாடுகளையும் அரசியல்-சமூக சித்தாந்தங்களையும் கொண்டவர்கள், தனி நபர் ஒருவரின் பின்னாலோ அல்லது ஒரு அமைப்பின் பின்னலோ ஒன்று திரள்வது என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை. அந்த உரிமையினை நிலைநாட்டும் எவரையும் சாடுவதல்ல இப்பதிவின் நோக்கம். மாறாக, காலப்போக்கில் இவ்வாறான அணிகள் தங்களுடைய அடிப்படையினை, அடையாளத்தினை இழந்து வெறுமனே அதிகாரத்தினைக் கைப்பற்றிக்கொள்வது அல்லது கைப்பற்றிக்கொண்ட அதிகாரத்தினைத் தக்கவைத்துக்கொள்வது என்ற ஒரே நோக்கத்தினை மையமாகக் கொண்டு தங்களுடைய செயற்பாடுகளினை முன்னெடுத்துச் செல்வதனையும் அத்தகைய அணிகளின் பின்னால், பகுத்தறிவின்றி மந்தைகளைப் போன்று ஓடிக்கொண்டு இருக்கின்ற துரதிர்ஷ்டத்தினையும் எனது வார்த்திகளில் பதிவிடுவதே நோக்கம்.

சில நபர்களை அல்லது குழுக்களினை, அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமலும் தட்டிக்கேட்காமலும் தங்களுடைய அரசியல் சுயலாபங்களுக்காக, அப்படியே அங்கீகரித்துக்கொள்கின்ற அரசியல்வாதிகளினை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கின்ற மடைமை களையப்படாவிட்டால் எம்முடைய அபிலாசைகள் மட்டுமன்றி அடையாளமும் அடியோடு அழிக்கப்பட்டுவிடும் என்பது நாம்  மறுக்கின்ற உண்மை. நாடுகடந்து வாழ்கின்ற நாட்டுப்பற்றாளர்களினதும், தங்களினுடைய அகதி அந்தஸ்தினை தக்கவைத்துக்கொள்ள வெள்ளமுள்ளி வாய்க்காலில் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்துகொண்டிருக்கும் "தமிழர்களினதும்" சுயநலம் தோய்ந்த தமிழுணர்வு வார்த்தைகளினால் தவறான வழியில் செல்ல முனைகின்ற இளைய சமுதாயம் ஆரோக்கியமான ஒன்றல்ல என்பது என்னுடைய  கருத்து.

அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லியே தங்களுடைய பிள்ளைகளினை குடிமக்களாக இன்றி வெறும் மக்களாகவே வளர்க்கின்ற பெற்றோர்களின் மனப்பாங்கு, இங்கு அதிரடி அரசியல் செய்பவர்களின் வாழ்க்கையினை மிகவும் எளிமையாக்கிவிடுகின்றது. தேர்தல் காலங்களின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் சொல்லி வாக்குப் பைகளினை நிரப்பிக்கொள்கின்ற அரசியல்வாதிகள், அரசியல் சாக்கடையாகவே இருப்பதனை சௌகரியமாகக் கருதுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்கள் என்ன என்பதனைத் தெளிவுபடுத்த எத்தனிக்காத அரசியல்வாதிகளும் அதனைத் தெரிந்துகொள்ள அக்கறைப்படாத நாங்களும் இருக்கும் வரை அரசியல் என்பது சாக்கடையாகவே இருக்கும் என்பது நிராகரிக்க முடியாத நிஜம். வடமாகாண சபைத் தேர்தல் இதற்கு மிகவும் பொருத்தமான உதாரணம். மண்புழுவினை சர்ப்பத்துக்கு இணையாகக் காட்டி மாகாணசபை இருக்கைகளினை நிறைத்துக்கொண்ட எமது அரசியவாதிகளினால் அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளினை நிறைவேற்ற முடியாதிருக்கின்ற நிலைமை ஆச்சரியத்துக்குரியதல்ல. 

வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களினைப் பொருத்தவரை அரசியல் கட்சித் தெரிவு என்பது ஒரு குறித்த கட்சியினை அடிப்படையாகக் கொண்டது. இந்த நிலை எம்முடைய ஒருமைப்பாட்டினை மற்றைய கட்சிகளுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துரைக்க மிகவும் அவசியமான ஒன்று (உதாரணம்: வடமாகாண சபைத் தேர்தல்). இருப்பினும் இந்த நிலை அக் குறித்த கட்சிக்குப் பொறுப்புக் கூறும் கடப்பாட்டினை இல்லாதொழித்து விடுகின்றது என்பதனையும் மறுதலிக்க முடியாது. இவ்வாறான தன்மை எம் அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் பொறுப்பற்ற தன்மையினையும் அசமந்தப்போக்கினையும் ஏற்படுத்திவிட்டது என்பது யாவருமறிந்த ரகசியம்.

இவ்வாறான தன்மை குறிப்பிட்ட கட்சிகளுக்கு மேலாதிக்க தன்மையினை அளித்துள்ளது. இதன் காரணமாக அரசியலில் இணைபவர்கள் தங்களுடைய கொள்கைகளையும் கோற்பாடுகளையும் கை கழுவிவிட்டு வேறும் அதிகாரத்துக்காக தங்களுடைய சுய கௌரவத்தினையே விட்டுக்கொடுத்து சமரசம் செய்கின்ற அளவுக்கு அதிகார வெறி வளர்ந்திருப்பது எந்த வகையிலும் தமிழ் மக்களாகிய எங்களுக்கு நன்மை பயக்கப்போவதில்லை என்ற உண்மையினை நாம் அனைவரும் உணராதவரை பொதுமக்களாகிய நாங்கள் வெறும் வாக்காளர்களாவே, எமது அரசியல்வாதிகளாலேயே பார்க்கப்படுகின்ற தன்மை மாறப்போவதில்லை.

வாக்காளர் அட்டையுடன்,
ஐங்கரன் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பி எனக்கொரு எழுதுமட்டுவாழ்!

வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை