கொழுக்கட்டையா மோதகமா?

இலங்கையர்களாக எம்முடைய தலைவிதியினை நாமே தீர்மானிக்க ஆரம்பித்து 66 வருடங்கள் முடிவடைந்தும் எமக்கிடையேயான வேற்றுமைகள் இன்னும் களையப்படாமலே இருப்பது கண்கூடு. அடிக்கடி வந்துபோகும் தேர்தல்களும் கூடவே அரங்கேறும் ஆட்சி மாற்றங்களும் எம்முடைய வாழ்வின் தவிர்க்க முடியாத பாகங்களாகிவிட்டன. ஜனநாயக ஆட்சிக்கு இத்தகைய பொறிமுறைகள் அத்தியாவசியமானவை என்பது அனைவரும் அறிந்தது. இருப்பினும் இத்தகைய கட்சித் தேர்தல் பொறிமுறைகள், கையாளப்படுகின்ற / அணுகப்படுகின்ற தன்மை மனதினை நெருடுகின்ற வகையில் அமைந்துள்ளமை கசப்பான உண்மை.

சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் (திடீர்) திருப்பங்களும் கட்சி மாறல்களும் மக்களின் மனதில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளமை கண்கூடு. தென்னிலங்கை அரசியல், தமிழர்களின் அபிலாசைகளை குழி தோண்டிப்புதைப்பதில் எவருக்கு ஈடுபாடு அதிகம் என்பதனையும் போரினை முடிவுக்குக் கொண்டு வந்தது மட்டும் போதுமா என்ற கேள்வியினையும் அடிப்படையாகக் கொண்டு சுழன்று கொண்டு இருக்கின்ற வேளையில் தமிழர்களின் குறிப்பாக வடக்கு கிழக்கினைத் தாயகமாக் கொண்ட தமிழர்களின் எதிர்பார்ப்புகள் வேறுவிதமாக உள்ளமை வெள்ளிடை மலை.

அடுத்த ஜனாதிபதி யார் என்பதனைத் தீர்மானிப்பதில் சிறுபான்மையினரின் வாக்குகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு செல்வாக்குச் செலுத்தும் என்பது இந்தத் தேர்தலின் ஒரு  அம்சமாக அமையும். தற்போதைய ஜனாதிபதி சிறுபான்மையினரின் அன்பினை சம்பாதித்துக்கொள்ளவில்லை என்பது அனைவரும் அறிந்தது. "பயங்கரவாதம்" என்று தலைப்பிட்டு  ஒரு இனத்தின் அபிலாசைகளை, ஒட்டுமொத்தமாக  அழித்ததன் மூலம் பேரினவாதிகளின் வாக்குகளினை சம்பாதித்துக்கொண்டு ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துகொண்ட தற்போதைய ஜனாதிபதி, காலப்போக்கில் பெரும்பான்மை மக்களின் அன்பினையும் அவரினதும் அவரைச் சுற்றி உள்ளவர்களினதும் செயற்பாடுகளினால் படிப்படியாக இழந்துவிட்டமையை அண்மைய அரசியல் மாற்றங்களும் அம் மாற்றங்களினை வழிமொழியும் மக்களும் சான்று.

2015 தேர்தல் நாம் கடந்து வந்த மற்றைய தேர்தல்களைப் போலவே தமிழர்களாகிய எமக்கு எந்தவிதமான தீர்வினையும்  பெற்றுத்தராது என்பது நாம் அனைவரும் அறிந்தது. அதே நேரம் விலகி இருப்பதும் எந்தவிதமான நன்மையையும் பயக்காது என்பதும் நடைமுறை ஜதார்த்தம். எவ்வாறாக இருப்பினும், இந்தத் தேர்தல், (தடு)மாறும் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தினைப் பொருத்தவரையில் முக்கியமானதாகவே இருக்கும். சரியான தலைமைத்துவமும் மக்களுக்கு பொறுப்புக்கூறும் தன்மையும் இல்லாத  தன்மை தேசியக்கூட்டமைப்பினுள் காணப்படுகின்ற  நிலை, இனி வரும் காலத்தில் தமிழர்களின் அரசியல்  எதிர்காலத்தினை மிகவும் இட்டுக்கட்டான நிலைக்கு  இட்டுச் செல்லும் என்பதனை எதிர்வு கூற வானசாஸ்திரம் கற்க வேண்டிய அவசியமில்லை.

இந்த நிலை, 2015 தேர்தலினை முக்கியமானதாக தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் உருவகித்துள்ளது. இருப்பினும் வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதித்து வரும் நெடிய மௌனம் மக்கள் மத்தியில் ஒரு உறுதிப்பாடற்ற தன்மையினை ஏற்படுத்தியுள்ளது. பலத்த பிரச்சாரங்களின் விளைவாக பெருந்திரளான மக்கள் மாகாண சபைத்  தேர்தலில் வாக்களித்த போதும், வடமாகாண சபை குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவிதமான நிவாரணங்களையோ, தீர்வுகளையோ வாக்களித்த மக்களுக்கு பெற்றுத்தரவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முனைப்புடன் வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குரியது.

கூட்டமைப்பினருடன் உடன்பாட்டுக்கு வருவது தங்களுடைய (பெரும்பான்மை இனத்தினை அடிப்படையாகக் கொண்ட) வாக்கு வங்கியினைப் பாதிக்கும் என்ற காரணத்தினாலும் தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள் மனதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவிற்கு இடமில்லை என்ற வெளிப்படையான உண்மையின் காரணமாகவும் தமிழரின் வாக்குகளை சேகரிக்கும் செயற்பாடுகளில் பொது வேட்பாளர் இதுவரைக்கும் வெளிப்படையாக ஈடுபடவில்லை. இருப்பினும் திரைமறைவு அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்துகொண்டு இருக்கின்றன என்பதனை புரிந்துகொள்வதற்கு நாம் சாணக்கியனின் வழித்தோன்றல்களாக இருக்கவேண்டிய தேவையில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தம்மை விலக்கி வைப்பதன் மூலம் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது தேசிய அரசியலின் மூலமாக தீர்வு ஒன்றினை எதிர்பார்க்கின்ற ஒரு இனத்தின் அரசியல் எதிர்காலத்திற்கு எந்தளவிற்கு நன்மை பயக்கும் என்பது விவாதத்திற்கு உரியது. நீண்ட காலத்திற்குப் பிற்பாடு பெரும்பான்மை இன மக்களின் வாக்குகள், இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையில் ஏறத்தாள சமனான அளவில் பிரியும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 8, என்ன மாற்றத்தினைக் கொண்டுவரும் என்பது சிறுபான்மை மக்களின் வாக்குகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு தங்கி உள்ள நிலையில் சிறுபான்மைக் கட்சிகள் எந்த வேட்பாளருடன் அணி திரள்வது என்பது தொடர்பில் மிகக் கவனமாக முடிவு எடுக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

மகிந்த மீண்டும் ஒரு முறை மன்னராவதை விரும்பாத பெரும்பான்மை சிறுபான்மையினர் விரும்பியோ விரும்பாமலோ பொது வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்பது அனைவரும்  ரகசியம். மதவெறிக் குண்டர்களைத் திரட்டி முஸ்லிம்  சமூகம் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட ஜனாதிபதி தற்போதைய காலகட்டத்தில் வெறுமனே பெரும்பான்மை மக்களின் வாக்குகளிலேயே தங்கியிருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலையில் பொது வேட்பாளர் தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் கூட்டணிகளையும் நிதானமாகக் கையாள வேண்டியது அவசியம். பெரும்பாலான ஊடகங்கள் ஆளும் அரசாங்கத்தின் அடிவருடிகளாக உள்ள நிலையில் மக்களினை சென்றடையும் செய்திகளினை கட்டுப்படுத்தும் சக்தி பொது வேட்பாளரிடம் இல்லை.


எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான எந்த விதமான கூட்டுச்சேர்க்கையும் பொது வேட்பாளருக்கு தீங்கு விளைவிக்கின்ற விதத்தில் திரிபுபடுத்தப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என்பது யாவரும் அறிந்தது. 2004 பாராளுமன்றத் தேர்தல் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இந்த நிலையில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்பில் எந்தவித கருத்தினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்காது இருப்பது ஆரோக்கியமான முடிவாக இருக்கும். இந்த ஜனாதிபதித்  தேர்தலினைப் பொருத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளாக பொது வேட்பாளருக்கு, பெரும்பான்மை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தரக்கூடிய வகையில் நிபந்தனைகளின் அடிப்படையில், மறைமுகமாக ஆதரவளிப்பதும் தமிழ் மக்களினை தேர்தலில் வாக்களிக்க ஊக்குவிப்பதுமே அமையும்.

பொது வேட்பாளரின் வெற்றி தமிழருக்கு நன்மை பயக்குமா என்பது தொடர்பில் எவராலும் கருத்துக் கூற முடியாது. ஆனால், தற்போதைய ஜனாதிபதியின் வெற்றி நன்மை பயக்காது என்பதனை கடந்த 10 வருடங்களில் நடந்தவை கட்டியம் கூறி நிற்கின்றன. மேலும், தேர்தலில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது அரசியல் ரீதியான தீர்வினை எதிர்பார்க்கும் எவருக்கும் ஆரோக்கியமானதாக அமையாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பி எனக்கொரு எழுதுமட்டுவாழ்!

வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை